பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்வது சமீப காலமாக அதிகரிப்பதன் காரணம் என்ன?

#SriLanka #University
PriyaRam
2 years ago
பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்வது சமீப காலமாக அதிகரிப்பதன் காரணம் என்ன?

பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்வது சமீப காலமாக அதிகளவில் ஊடகங்களில் பதிவாகியுள்ளன. 

"அநியாயமாக பொறியியல் மாணவன் பலியாகிவிட்டானே , அநியாயமாக மருத்துவ மாணவன் பலியாகிவிட்டானே " என்ற தோரணையிலான இரங்கல் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. 

எந்த மனித உயிரும் மதிப்புக் குறைந்தது அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும். பொதுப் பார்வையில் பல்கலைக்கழகம் செல்பவர்கள் எல்லாவகையிலும் " புத்திசாலிகள் " என்று கருதப்படுவதும் இவ்வளவு போட்டியிட்டு உயர்கல்வியில் நுழைந்தும் அதன் பயனைப் பெறவில்லையே என்று ஆதங்கப்படுவதும் இயல்பானது தான்.

இலங்கையைப் பொறுத்தவரை கல்வி/ உயர்கல்வி என்பது ஒரு துறையில் - ஒரு பிரிவில் - காட்டப்படும் நினைவாற்றலை அதிகம் அடிப்படையாக வைத்து திறன்கள் மதிப்பிடப்படும் ஒரு முறையாகும். (அதனால்தான் பெட்டிக் கடை கூட நடாத்தத் தெரியாத வர்த்தக முகாமைத்துவப் பட்டதாரிகளையும், "பிரிண்ட் பண்ண படிக்கவில்லை " என்று சொல்லும் கணினிப் பட்டதாரிகளையும் ...இன்னும் பல வேடிக்கைகளையும் நாம் காணமுடிகிறது)

இந்தப் பல்கலைக்கழகம் செல்லும் போட்டியில் வெற்றிபெற பெரும்பாலான பிள்ளைகள் நம் சமூகத்தில் பாலர் வகுப்பிலிருந்தே பதப்படுத்தப்படுகின்றனர் .

விளைவு? " படிப்பு படிப்பு படிப்பு முக்கியம் .... வீட்டில் படிப்பு ரோட்டில் படிப்பு,.. பாடப் படிப்பு புத்தகப் படிப்பு ...நோட்ஸ் படிப்பு ..ஸ்கூல் படிப்பு ரியூஷன் படிப்பு ..படிப்பு படிப்பு படிப்பு முக்கியம்" (சண்முகலிங்கனின் "வால்பேத்தைகள்" நாடகத்தில் கேட்டு ரசித்த பாடல் பகுதி)

பிள்ளை சமூகமயப்படுத்தப்படாமல், நண்பர்களுடன் கூடி விளையாடி ஆயுளுக்கான ஒரு நட்பு வட்டத்தைப் பெறாமல், எப்போதும் வகுப்பில் அதிக புள்ளிகள் பெறுவது எப்படி என்ற இலக்கோடு மட்டும் வளர்க்கப்படுவதே இந்த தற்கொலைகளுக்கான பிரதான காரணி. 

மன அழுத்தம் என்பது மனித வாழ்வில் அடிக்கடி வந்து போகக்கூடிய ஒரு நிலைதான். பலவேளைகளில் தாயின்- குடும்ப உறவுகளின் புரிந்துணர்வுடனான அரவணைப்பே இந்த நிலையைப் போக்கி விடக்கூடியது .

குறிப்பிட்ட ஒரு வயதின்பின் பிள்ளைகள் தமது உணர்வுகள் எல்லாவற்றையும் பெற்றோருடன் பகிர்வதில்லை. இந்த நிலையில்தான் (support groups) நண்பர்களுடனான பகிர்தலின் முக்கியத்துவம் மிகவும் உணரப்படுகிறது. அதுவும் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையில் நிச்சயம் அவர்களுக்கு மனம் விட்டுப் பேச ஆட்களும் மனம் விட்டுப் பேசும் குணமும் (சிறுவயது முதல் பழகியிருத்தல் வேண்டும்) தேவை.

ரோபோ போல பாடசாலை - அது முடிந்தால் ரியூஷன் - அது முடிந்தால் வீட்டில் படிப்பு என்று இருப்பவர்கள் சமூகமயப்படாமலே வளர்ந்துவிடுகிறார்கள். அதனால் அடுத்தவன் முகம் வாடியிருப்பதைக் கவனிப்பதும் இல்லை - கண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. இதனால் இவரைப் பற்றிக் கவலைப்படவும் இன்னொருத்தன் இருப்பதில்லை. 

அதிக ஃபோக்கஸ் தேவைப்படுகிற விஞ்ஞான மருத்துவ பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் சமூக நடத்தைகளிலும், உலக அறிவிலும் , சமயோசித புத்தியிலும் பின்தங்கி இருப்பதை அவதானிக்கலாம். உதாரணத்திற்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் ஒப்பீட்டளவிலான கம்பியூட்டர், தொடர்பாடல், உலக அறிவு அதிர்ச்சி அளிக்கும் அளவில் குறைவானது. பழகியவர்கள் அறிந்திருப்பீர்கள். 

அவர்களது கல்வித்துறையின் அழுத்தம் காரணமாக வெளியே சிந்திக்க முடிவதில்லை - பயிற்றப்படுவதுமில்லை. இதில் விதிவிலக்கான பல நண்பர்கள் எனக்கு உண்டு. 

உலக அளவில் மருத்துவ மாணவர்கள் இன்ரேண் எனப்படும் உள்ளகப் பயிற்சிக் காலத்தில் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதைத் தடுக்க ஆஸ்திரேலியாவில் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

இந்த டாக்டர் என்ஜினியர் , பட்டப்படிப்பு என்ற ஓட்டப் போட்டியில் உள்ளவர்கள் பெரும்பான்மையும் பாடசாலைக் காலங்களில் புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஈடுபடாதவர்களே . இவை மன வளர்ச்சிக்கும் சமூகமயப்படலுக்கும் மிக மிக முக்கியமானவை.

இவ்வாறு ஒரு சின்ன வட்டத்தில் வாழ்ந்துவிட்டு , பல்கலைக்கழகத்தில் ஒரு காதல் தோல்வியைக் கூட பகிர நட்பின்றி , அல்லது பரீட்சைத் தோல்விக்கு ஆறுதல் சொல்ல ஆளின்றி மரணிப்பவர்களின் விதி - அவர்கள் பாலர் வகுப்புக்காலத்திலேயே எழுதப்பட்டுவிடுகிறது போல.

 + பிள்ளைகளின் ஆரோக்கியமான நட்பை, அன்பால் ஆன உறவு வட்டத்தை ஊக்குவியுங்கள் . முடிந்தால் நீங்களும் அவர்களது நண்பர்களுடன் உறவு பாராட்டுங்கள்.

 + இசை, ஓவியம் , விளையாட்டு , கம்பியூட்டர் என்று அவர்கள் விரும்பும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளை ஊக்குவியுங்கள்.

 + மாற்றுவழிகள், மாற்றுத் துறைகள் என்று வாழ்வில் எதற்கும் பல மாற்றீடுகள் உண்டு என ஒரு மனிதன் உணர , அவனுள் படைப்புத் திறன் வளர்க்கப்பட வேண்டும். அதை ஊக்குவியுங்கள் (பேச்சுப் போட்டிகள், கவிதை, இசை, வாசிப்பு...)

 + 9 ஆம் வகுப்பு பிள்ளையும் MBBS இரண்டாம் வருடம் படிப்பது போல் பில்டப் பண்ணி ஸ்கூல் கட் பண்ணினால் உலகம் அழிந்துவிடும் என்று முக்கிய சுற்றுப் பயணங்களுக்கோ போட்டிகளுக்கோ நிகழ்வுகளுக்கோ அனுப்பாது விட்டுவிடாதீர்கள்.

 + நாலு நல்லது கெட்டது அறிந்த பிள்ளைகளாக வளருங்கள். மனங்களை நம்பிக்கை ஊட்டிப் பண்படுத்துங்கள். இந்த உலக வாழ்க்கை மிகச் சிறியது . 

 சற்குணநாதன் மணிமாறன்(Positive Psychologist)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!