ரயில் பயணநேரம் ஒன்றரை மணி நேரத்தால் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு
கொழும்பு - காங்கேசன்துறை ரயில்பாதை மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னர், காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கான பயண நேரம் தற்போதைய நேரத்தை விட ஒன்றரை மணி நேரத்தால் குறைவடையும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது அனுராதபுரத்திலிருந்து மஹவ வரையில் இந்த ரயில்பாதையை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும், இந்த நடவடிக்கைகளை இரண்டு மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவீனமயப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு - காங்கேசன்துறை ரயில்பாதையின் சமிக்ஞை (சிக்னல்) கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழ் 462 கோடி ரூபா (15 மில்லியன் டொலர்) நிதிக்கான அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில்பாதையை நவீன மயப்படுத்துவது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக இந்நிதிக்கான அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.