அம்பலாங்கொடை அதிபரை தாக்கிய சந்தேக நபர் விளக்கமறியலில்
அம்பலாங்கொட ஸ்ரீ தேவானந்தா வித்தியாலய அதிபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டி நீதவான் ஹன்சதேவ சமரதிவாகர இன்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை அடுத்த நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்கொட ஹேகாலை கோவில் வீதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாடசாலையின் பூப்பந்து விளையாட்டில் உருவான பிரச்சனையே அதற்குக் காரணம்.
இதேவேளை, அதிபர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலயத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் பணிக்கு சமூகமளிக்காது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பாடசாலையின் வழமையான செயற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் உள்ள 152 ஆசிரியர்களில் 05 பேர் மாத்திரமே இன்று பணிக்கு வந்துள்ளனர்.
அந்த பாடசாலையில் மொத்தமாக உள்ள 3500 மாணவர்களில் 200க்கும் குறைவானவர்களே இன்று பாடசாலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.