தலதா மாளிகைக்கு அருகில் கைது செய்யப்பட்டோர் விடுதலை!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் முப்பத்தொரு வெற்று தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு குப்பைகளை சேகரிக்க வந்த லொறியை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டதன் பின்னர் வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று (19) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
லொறியில் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு பையில் டி56 ஆயுதங்களின் 31 வெற்று தோட்டா உறைகளை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் போது வெற்று தோட்டா உறைகள் காணப்பட்டதாக தெரியவந்ததாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.
வெற்று தோட்டா உறைகளை அதிகளவான பணத்திற்கு பழைய உலோகத்திற்கு விற்க முடியும் என்பதால், சந்தேக நபர்கள் இதை தாம் ஒதுக்கி வைத்ததாகக் கூறியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ மேலும் தெரிவித்தார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் குற்றச் செயல்களை மேற்கொள்வதற்கான எந்த உள்நோக்கமும் நிரூபிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.