பல ஆண்டுகளுக்குப் பின்னர் சவுதி அமைச்சர் முதல்முறையாக ஈரான் தலைநகருக்கு விஜயம்

#China
PriyaRam
2 years ago
பல ஆண்டுகளுக்குப் பின்னர் சவுதி அமைச்சர் முதல்முறையாக ஈரான் தலைநகருக்கு விஜயம்

ஆசியாவில் முக்கிய இஸ்லாமிய நாடுகளான ஈரானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே சுமூக உறவை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அமைச்சர் முதல்முறையாக ஈரான் தலைநகருக்குச் சென்றுள்ளார். 

ஈரானுக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக சுமுகமான உறவு இருந்ததே இல்லை. பிராந்திய சூழல், எண்ணெய் ஏற்றுமதிக் கொள்கை, மேற்கத்திய நாடுகளுடனான உறவு என பல புவிசார் அரசியல் காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இருந்ததே இல்லை. 

சவுதியில் நிம்ர் அல்-நிம்ர் கொல்லப்பட்டது மற்றும் ஈரானில் சவூதி தூதரக அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவை காரணமாக 2016 இல் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லாமல் இருந்தன. 

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 2023 இல், சீனா தலையீட்டைத் தொடர்ந்து ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் உறவை ஏற்படுத்த ஒப்புக் கொண்டன. இந்தச் சூழலில் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் கடந்த சனிக்கிழமை ஈரான் தலைநகருக்குச் சென்றார். 

இது இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை மீட்டெடுக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஈரான் தலைநகர் சென்ற இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் அதிகாரபூர்வமாக வரவேற்றார். பின்னர், சவுதி இளவரசர் பைசல், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதை வரவேற்ற ரைசி, முஸ்லிம் உலகில் இரு நாடுகளும் முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நாடுகள் என்று தெரிவித்தார். கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், இளவரசர் பைசல் ஈரான் தலைநகருக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். 

என்ன பிரச்சினை;

முன்பு கூறியது போல கடந்த 2016 இல் சவுதி நாட்டில் இருந்த ஷியா முஸ்லிம் மதகுருவான ஷேக் நிம்ர் அல்-நிம்ர் உட்பட 47 பேரை அந்நாட்டு அரசு தூக்கிலிட்டது. அதைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அதன் தூதரகம் தாக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 2016 இல் சவுதி அரேபியா- ஈரான் இடையேயான உறவுகள் துண்டிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு கூட இல்லாமல்தான் இருந்தது. 

இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் சீனா மத்தியஸ்தம் செய்த நிலையில், ஈரானும் சவுதி அரேபியாவும் உறவுகளை மீண்டும் ஏற்படுத்தவும் தூதரகங்களைத் திறக்கவும் ஒப்புக்கொண்டன. சமீபத்தில்தான் இரு நாடுகளிலும் தூதரகங்கள் திறக்கப்பட்டன. கடந்த வாரம், ரியாத்தில் உள்ள தனது தூதரகத்தையும், ஜெட்டாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் துணைத் தூதரகத்தையும் ஈரான் மீண்டும் திறந்தது. 

ஏன் முக்கியம்: 

இரண்டும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் கூட சவுதி அரேபியா சன்னி முஸ்லிம்களை கொண்டுள்ளது. அதேபோல ஈரான் மிகப்பெரிய ஷியா முஸ்லிம் நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வந்தன. 

உதாரணமாக, 2015 ஆம் ஆண்டு முதல் ஏமனில் கிளர்ச்சி செய்யும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சவுதி எடுத்துள்ளது. இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி நகரங்கள், எண்ணெய் கிணறுகளைத் தாக்கும் நிலையில், இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுத்து வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே எப்படி மறைமுக மோதல் நடக்கிறது என்பதற்குச் சிறந்த உதாரணம். 

ஈரானின் தூதரகம் கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சரியாக அந்தநேரம் பார்த்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் சவுதி அரேபியா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!