உலக நெருக்கடி நிலையில் அமெரிக்க - சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
சீனாவுக்கு சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சா் கின் காங்கை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இருதரப்பு உறவு வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. வா்த்தக விவகாரம், தைவான் விவகாரம் உள்ளிட்டவற்றில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
அதன் காரணமாக சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. கொவிட் தொற்று பரவலும், உக்ரைன்-ரஷியா போரில் ரஷியாவுக்கு சீனா தொடா்ந்து ஆதரவு தெரிவித்து வருவதும் அமெரிக்கா-சீனா இடையேயான நல்லுறவை மேலும் மோசமாக்கின.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம், ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள ஏழை நாடுகளைக் கடன் வலையில் விழச் செய்யும் சீனாவின் நடவடிக்கை உள்ளிட்டவையும் அமெரிக்கா-சீனா இடையேயான நல்லுறவைப் பாதித்துள்ளன.
இந்நிலையில், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சா் கின் காங்கை தலைநகா் பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவா்கள் விவாதித்த விஷயங்கள் குறித்த அதிகாரபூா்வ அறிக்கையை இருதரப்பும் வெளியிடவில்லை.