நேபாளத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. 28 பேரை காணவில்லை
நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது.
கனமழையை தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
கனமழையால் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து உள்ளன. அந்நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
நேபாளத்தில் சங்குவாஷபா மாவட்டத்தில் ஹிவா ஆற்றில் நடந்து வந்த நீர்மின்சார திட்ட கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். கனமழையில் சிக்கி அவர்களில் ஒரு தொழிலாளர் உயிரிழந்து உள்ளார்.
அவர் கண்டெடுக்கப்பட்டார். 17 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இயந்திரங்கள் மற்றும் பிற சாதனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. தேபிள்ஜங் மாவட்டத்தில், வீடுகள் பல அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதில் சிக்கி, மற்றொரு நபர் உயிரிழந்து உள்ளார்.
வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 3 பேரை காணவில்லை. இதுவரை மொத்தம் 5 பேர் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். 28 பேரை இன்னும் காணவில்லை.
இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதனால், நீர்மட்டம் உயர கூடும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.