ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கி பாகிஸ்தானுக்கு உதவிய சீனா
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே மக்கள் அங்கு தவிப்பதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாகிஸ்தானில் குறைந்தளவே அந்நிய செலாவணி கையிருப்பாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் கிடைப்பது நிச்சயமில்லாததாகி விட்டது. இந்நிலையில், அந்நாட்டிற்கு அதன் நட்பு நாடான சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக கிடைத்துள்ளது.
நேற்றிரவு சீனாவிடமிருந்து இந்தத் தொகையை பெற்றதை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) உறுதிப்படுத்தியது. இருந்தாலும் வேறு எந்த விவரங்களையும் அந்த வங்கி பகிர்ந்து கொள்ளவில்லை.
அந்நிய செலாவணி கையிருப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருக்கும் நிலையில், இந்த ஒரு பில்லியன் டாலர் சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
முன்னதாக, பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், சீனாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய நிலுவை தொகையான 1.3 பில்லியன் அமெரிக்க டாலரில் கடந்த 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியது, அந்தத் தொகை திரும்பக் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் கூறியிருந்தார்.