பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு பாகிஸ்தான் விருப்பம்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இணைவதற்கு பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் ஆராயப்பட உள்ளது. பாகிஸ்தான் உட்பட 19 நாடுகள் இவ்வமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
மேலும், பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய உறுப்பு நாடுகளும் அங்கத்துவத்தை விரிவாக்க விருப்பம் கொண்டுள்ளன. பிரிக்ஸ் அமைப்பானது பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் ஜி7 அமைப்புக்கு நேரடிச் சவாலாக உள்ளது.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.5 சத வீதத்தை பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதேநேரம் ஜி7 நாடுகளின் பங்கு 30 சத வீதத்திற்கு குறைவடைந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளும், ஜி20 அமைப்பிலும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.