தாளையடி சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டு பிணை
வடமராட்சி கிழக்கு - தாளையடி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 03 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த நால்வரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, குறித்த நால்வரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதிமன்றில் நேற்றுப் பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த நால்வருக்கும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன், மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆய்வாளர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி ஆகியோரே நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் உதயசிவம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

