குருந்தூர் மலை காணிகள் விடுவிப்பு: எதிர்த்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய எல்லாவல தேரர்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற குருந்துமலை ஆலய சுற்றுப்புற காணியை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு தொடர்பில் தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குருந்தி விகாரையை சூழவுள்ள காணிகள் இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் கைகளுக்குச் சென்றால், அப்பிரதேசம் எதிர்வரும் காலங்களில் மிகவும் ஆபத்தான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அக்கடிதத்தில் எல்லாவல மேதானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தி விகாரைக்கு சொந்தமில்லாத காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியவந்ததாகவும், பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதால் இந்த காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது முறையல்ல எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருந்தி விகாரையைச் சுற்றியுள்ள பல இடங்கள். அத்துடன், பௌத்த விஹாரைக்கு அருகில் இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு காணிகளை வழங்குவது பொருத்தமானதல்ல எனவும் இதன் மூலம் பௌத்த இடிபாடுகளுக்கு அருகில் இனவாதிகளுக்குக் குடியேற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் காணிகளை வழங்கியதோ இல்லையோ பலவந்தமாக காணி அபகரிக்கப்பட்டதாகத் தோன்றுவதுடன், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், இந்தக் காணிகளின் உரிமையை மாற்றக் கூடாது என மேதானந்த தேரர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.