வடக்கு கிழக்குக்கு இராணுவப் படையணிகளோடு வரும் அமைச்சர்: சுமந்திரன் விடுத்த கோரிக்கை
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை ஜனாதிபதி பதவி விலக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி எங்களோடு நடாத்திய பேச்சு வார்த்தையிலும் கூட, அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லாதவர் போல பேராசிரியர் மானதுங்க காட்டிக்கொண்டார். அது அமைச்சரவைக்கும் அவருக்குமுள்ள பிரச்சனை.
எங்களுக்குள்ள பிரச்சனை, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு பற்றியது. அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார்.
அவருடைய பணிப்புரையின் கீழ்தான் சட்டவிரோத காணி அபகரிப்புகள் இடம்பெற்றுவருகிறன.
அதனால் ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.