அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டது. டிரம்ப் மொத்தம் 37 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்,
இதில் 31 எண்ணிக்கையிலான தேசிய பாதுகாப்பு தகவல்களை வேண்டுமென்றே தக்கவைத்துக்கொண்டது. இந்த நிலையில் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளிநாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக இன்று மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.