கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்
மாளிகாவத்தை லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் வாள்களால் வெட்டி பலத்த காயமடைந்துள்ளார்.
இது தொடர்பான சம்பவம் நேற்று (11) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 38 வயதுடைய "ரோஸி" என்ற பெண் பலத்த காயமடைந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் அருகே அவர் காத்திருந்தபோது, அங்கு வந்த இருவர் அருகில் உள்ள வீட்டிற்கு இழுத்துச் சென்று வாளால் சரமாரியாக வெட்டினர்.
அப்போது தனது மகள் தாக்கப்பட்டதை ரோசியின் தாயார் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்ற 31 மற்றும் 33 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் தெமட்டகொட பொலிஸாரால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாள்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் இருவருக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் 52 வயதுடைய பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் தெமட்டகொட சமிந்தவின் மகனுக்கும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று (11) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.