பொலிஸார் மீது கைக்குண்டை வீச முற்பட்ட நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
காலி அக்மீமன பிரதேசத்தில் நேற்று (10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்து காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடகந்தேவத்தை, மீகொட, ஸ்வலுவல பகுதியைச் சேர்ந்த மலீஷா விதுரங்க திஸாநாயக்க (வயது 19) என்பவரே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட அதே முகவரியில் வசிக்கும் ஹேவவெலங்கொட பதித்தினிகே இசுரு சம்மர் (19) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (10ம் திகதி) பொலிஸ் நடமாடும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அக்மீமன பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வீதியில் நின்றிருந்த இருவரைச் சோதனையிட முற்பட்டதுடன் ஒருவர் பொலிஸார் மீது கைக்குண்டை வீச முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் தங்கியிருந்த இருவரையும் சோதனையிட முற்பட்ட போது அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றதாக அக்மீமன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸார் சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ததாக அக்மீமன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணைகளின் பின்னர், அவரிடம் இருந்து T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 105 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.
அக்மீமன பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் மதுரங்க அருமப்பெரும தலைமையில் குற்றப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி எச்.ஜி.பேசப்பிரிய மற்றும் பிரதி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் குமார ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.