முல்லேரியா சிறுவன் மரணம்: சந்தேக நபர் வெளியிட்ட தகவல்
முல்லேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே ஹல்பராவ பிரதேசத்தில் வேலை செய்யும் இடத்தில் ஐந்து வயது குழந்தையொன்று வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புல் வெட்டும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புல் வெட்டும் இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது, குழந்தையின் மீது பிளேட் தாக்கியதாகவும், இதனால் பயந்து கண்ணாடி போத்தலால் குத்தி குழந்தை இறந்ததாக காட்ட முயற்சித்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
முல்லேரிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை இன்று (10ம் திகதி) பெற்றுக்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (08) மாலை முல்லேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே ஹல்பராவ பிரதேசத்தில் வேலை செய்யும் இடத்தில் சிறு குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக முல்லேரிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. ஹல்பராவ பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயது 6 மாதங்களைச் சேர்ந்த ஜொனாதன் மார்க் பொன்சேகா என்பவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் குழந்தை உயிரிழந்துள்ளது.
சடலத்தின் அருகில் இரத்தக் கறையுடன் உடைந்த கண்ணாடி போத்தல் ஒன்றும், அருகில் குழந்தையின் செருப்பு ஒன்றும் காணப்பட்டது.
குழந்தையின் காலில் மற்ற செருப்பு காணப்பட்டது. இந்த மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணை நேற்று முன்தினம் (08) இரவு இடம்பெற்றதுடன், முதற்கட்ட விசாரணையில் குழந்தை கண்ணாடி போத்தலில் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று இரவு மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தை இறப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு பெண் குழந்தையை வேலை செய்யும் இடத்தில் பார்த்ததாகவும், அப்போது அருகில் மற்றொரு நபர் புல் வெட்டிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குழந்தையின் வயிற்றின் இடது பக்கம் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் தினமும் காலையில் வேலைக்குச் செல்கிறார், சம்பவத்திற்கு முந்தைய நாள், தாய் தனது தந்தையின் (தாத்தா) வீட்டில் தனது குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார்.
பின்னர், குழந்தையின் தாத்தா ஒரு மரண வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது, எனவே அவர் பேரனை நட்பு புல்வெட்டும் தொழிலாளியிடம் ஒப்படைத்தார். புல்வெளியை வெட்டிக்கொண்டிருந்தவர், குழந்தை கண்ணாடி போத்தலின் மேல் விழுந்து இறந்துவிட்டதாக அருகில் வசிப்பவருக்குத் தெரிவித்தார்.
உடைந்த கண்ணாடி போத்தல் பாகங்களுக்கும்இ குழந்தை இறந்து விழுந்த இடத்துக்கும் இடையே உள்ள இடைவெளி, நான்கு அடியாக இருந்தாலும், அந்த இடைவெளியில், தரையில் ரத்தக்கறை இல்லாதது, பொலிலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும்இ இவ்வளவு சிறிய குழந்தையின் உடம்புக்கு அடியில் விழுந்து ஒரு போத்தல் சிறிய துண்டுகளாக உடைக்க முடியாது என்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதனடிப்படையில் இது கொலையா என்பது தெரியவர விசாரணைக்காக முல்லேரிய பொலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் குழந்தை இறந்த போது புல் வெட்டிய நபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
புல் வெட்டும் நபர் கோட்டா பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அங்கு அவர் கூறுகையில், தனது புல்வெட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிபார்த்தபோதுஇ அருகில் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்று மோதி உடைந்தது. கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறாமல் இருக்க இயந்திரத்தின் பிளேட்டை ஓரமாக எடுத்துச் சென்றபோது, அருகில் இருந்த குழந்தையின் வயிற்றில் அடித்ததாகவும், காயங்களுடன் குழந்தை கீழே விழுந்ததால் பயந்து போனதாகவும் புல் அறுத்துக் கொண்டிருந்தவர் கூறினார்.
அதன்படி, கண்ணாடி பாட்டிலை உடைத்தும், கத்தியால் குத்தியும் குழந்தை இறந்ததை உணர்த்தும் வகையில் செயல்பட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
119 அவசர இலக்கத்திற்கு அழைத்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இன்று பிற்பகல் முல்லேரிய பொலிஸார் புல் வெட்டும் நபரை கைது செய்துள்ளனர். 51 வயதான குறித்த நபர் இன்று (10) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முல்லேரிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.