காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்க துரித நடவடிக்கை: ஜனாதிபதி
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்களை விரைவாக உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில், சட்டம், நிறுவன நடவடிக்கைகள், காணிப்பிரச்சினைகள், கைதிகளின் விடுதலை, அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் தேசிய காணி கொள்கையொன்றை உருவாக்குதல், காணாமல் போனோர் அலுவலகத்தை மிகவும் திறம்பட நடத்துதல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
இதுவரையில் தகவல்களை வெளியிட முடியாத காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இழப்பீடு அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை அமைக்கும் பணிகளை எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்து அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பில் விரிவான அறிக்கையை நீதி அமைச்சின் ஊடாக சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.