சமல் ராஜபக்ச நாட்டின் அதிபராக இருந்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்காது- பெங்கமுவா நாலக தேரர்
சமல் ராஜபக்ச நாட்டின் அதிபராக இருந்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்காது என பெங்கமுவா நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளையும் வெளியே எடுத்து ராஜபக்சாக்களை அழிக்கும் முயற்சியே தற்போது நடைபெறுகின்றது. ராஜபக்சாக்கள் 100 வீதம் சரியானவர்கள் என்று நாங்கள் கூறவில்லை.
ஈஸ்டர் தாக்குதலும் ராஜபக்சாக்களின் செயல் என்று சிலர் கூற முயற்சிப்பதைப் பார்த்தோம். இதுபோன்ற செயல்களை செய்வது கோழைத்தனம் என்று நினைக்கிறேன். ராஜபக்சாக்களை வெள்ளையடிக்க நாங்கள் தயாராக இல்லை.
அவர்கள் தவறு செய்தால் அதனை தவறு என்று தெரிவிப்போம் .ஆனால் இந்த நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் ராஜபசாக்கள் மீது பழி போட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
கோட்டாபய ராஜபக்ச மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கையை அவர் முற்றாக அழித்ததாக கூறுகின்றோம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை சிதைத்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். இன்றும் சிலர் எங்களை அழைத்து குற்றம் சாட்டுகிறார்கள்.
தற்போது இதுவரை வெளிவராத இரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். அன்றைய தினம் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட போது, சமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு நான் பரிந்துரைத்தேன்.
பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய நாட்டுக்கு ஆற்றிய சேவையை நினைத்து அவரை அதிபராக்குவதற்கும் கடுமையாக உழைத்தோம். அப்போது சமல் அதிபர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டிருந்தால், நாடு இந்த நிலையை அடைந்திருக்காது என்று நான் இன்னும் நம்புகிறேன்.'