நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் -பிரதமர் உறுதி

ஐ.எம்.எப். ஊடாக மீண்டும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். , “கடந்தாண்டு எமது அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.
எமது நாட்டு மக்களும் இதனை மறந்திருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினைiயிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தை இதற்காக நாடுமாறு பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கோரினார்கள். இதன் பலன் இன்று எமக்கு கிடைத்துள்ளது.
2.9 பில்லியன் டொலர் நிதியுதவி எமக்கு கிடைக்கவுள்ளது. ஐ.எம்.எப். இடம் செல்லது இது ஒன்றும் புதிதல்ல. நாம் 16 தடவைகள் ஐ.எம்.எப். இன் உதவியை நாடியுள்ளோம்.
இதனை இங்குள்ள பலர் மறந்துவிட்டார்கள். எனினும் கடந்த 12 மாதங்களில் நாம் எந்தவொரு அரச உத்தியோகஸ்தரையும் பதவியிலிருந்து நீக்கவோ, அவர்களின் சம்பளத்தை குறைக்கவோ இல்லை.
இந்த செயற்பாட்டின் ஊடாக இலங்கை ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாக காணப்படுகிறது.
இன்று சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் கால் ஆண்டில் மட்டும் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார்கள். இந்த நிலைமையை இதேபோன்று கொண்டு சென்றால், நாட்டை விரைவிலேயே சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்துவிட முடியும்.
வரிகளை உயர்த்தியமை தொடர்பாக பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் இவர்களேதான் வரிகளை குறைத்தாலும் அரசாங்கத்தை குறைக்கூறுவார்கள். இதுதான் இங்குள்ள பிரச்சினை. நாம் நாடு தொடர்பாக ஆழமாக சிந்திக்க வேண்டும். ஐ.எம்.எப். ஒப்பந்தம் மட்டும்தான் நாட்டை மீட்டெடுக்கும் ஒரே வழி என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இது உண்மைக் கிடையாது. ஐ.எம்.எப். சர்வதேசத்தின் கதவுகளை திறந்துள்ளது. சர்வதேச வங்கிகளுடன் மீண்டும் எம்மால் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வழி வகுத்துள்ளது.
பாரிஸ் கிளப், இந்தியா உள்ளிட்டவையுடன் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியா- பங்காளதேஸ் போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்துள்ளன. தனியார் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளார்கள்.
அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கும் புதிய வேளைத்திட்டங்கள் உள்ளன.’ எனத்தெரிவித்துள்ளார்.



