காரைக்கால் - காங்கேசன்துறை கப்பல் சேவை: ஓர் விரிவான பார்வை

இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் - யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவின் காரைக்கால் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சேவை இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலிலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாத நடுப் பகுதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதாக IndSri Ferry Service நிறுவனம் குறிப்பிடுகின்றது.
65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும்.
இந்த கப்பலில் 120 - 150 பயணிகள் வரை ஒரு தடவையில் பயணிக்க முடியும் என்பதுடன் ஒரு பயணி 100 கிலோகிராம் பொருட்கள் கொண்டுசெல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பலில் 6 ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கப்பலில் உணவு விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறவிருந்த சில அனுமதிகள் தாமதமடைந்ததால், கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கப்பல் சேவைக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் பாதுகாப்பு ஒழுங்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சேவையில் ஈடுபடுத்தப்படும் கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக்கப்பல் சர்வதேச தர நிர்ணயங்களை கொண்டுள்ளதாகவும் IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நந்தகோபன் தெரிவித்தார்.
கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்றுமாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்ததுள்ளது.
இந்த நிலையில் இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவுத் திணைக்களத்திற்கு தேவையான கட்டிடங்களை அமைக்கும் பணிகள் முழுமூச்சில் இடம்பெற்று வருகின்றன.
பயணிகள் தங்குவதற்கு வசதியாக துறைமுகம் மேம்படுத்தப்படுகின்றது. இவற்றுக்காக இலங்கை அரசு 150 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது என கப்பற்போக்குவரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
காங்கேசன் துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை இயக்கப்படும் நிலையில் கப்பல் சேவை பயன்படுத்துவோர் வசதி கருதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட சொகுசு ரயில் சேவை இடம்பெறும். பௌத்த யாத்திரீகர்கள் கூட படகில் இந்தியாவிற்கு சென்று புத்தகாயாவை சென்றடைய முடியும் என அமைச்சர் கூறினார்.
இந்த கப்பல் சேவைக்காக இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணம் வருவோர் தங்குவதற்கு யாழ் நகரில் ஏராளமான விடுதிகள் உள்ளன. யாழ் நகரில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 20 நிமிடங்களில் செல்ல முடியும்.
குறித்த கப்பல்சேவையை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இப்படகு சேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் நிறைவு செய்துவிடார்.
நிரஞ்சன் நந்தகோபன் யாழ்ப்பாணத்தினை பூர்வீகமாக கொண்டவராவார். 18 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்ற அவர், ஊர்காவற்துறை வேதாரணியம் இடையே கப்பல் சேவைகளை நடத்திய குடும்ப பின்னணியை கொண்டவராவார். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூதாதையர்கள் இரு நாடுகளுக்குமிடையே கப்பல் இயக்கியதாகவும் அவர்களிடம் மூன்று கப்பல்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த கப்பல் சேவை மூலம் இரு நாடுகளுக்கும் இலாபகரமானதாக மாற்றுவதே எனது நோக்கம். நாங்கள் முதலில் கப்பல் சேவையை தொடங்குகின்றோம். எதிர்காலத்தில் ஏனைய நிறுவனங்களும் இந்த முயற்சியில் இறங்கும் எனவும் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.



