குடிப்பழக்கம் இல்லாததால் நிறுத்தப்பட்ட திருமண சம்மந்தம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் குடிப்பழக்கம் இல்லாததால் திருமண சம்மந்தம் குழம்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது, கதை வழக்கில் மாப்பிள்ளைக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருக்கிறதா? என கதை எழுந்துள்ளது.
மைலோ மட்டுமே குடித்து பழகிய மாப்பிள்ளை.. ச்சே ச்சே... எனக்கு அத்தகைய பழக்கவழக்கங்கள் எதுவுமில்லை என பெருமையாக கூறியுள்ளார்.
அதன்போது மணப் பெண்ணின் தாயார், "இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா" என நக்கலாக கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த மாப்பிள்ளைவீட்டார் சம்பந்தத்தை குழப்பிக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
தனது ஒழுக்கமாக வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு இது தானா என மாப்பிள்ளை வருந்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



