அரச உத்தியோகத்தர்கள் மௌனம் காத்தால் எதிர்காலத்தில் ஓய்வூதியத்தை முற்றாக இழக்கும் அபாயம்

அரச உத்தியோகத்தரின் அடிப்படைச் சம்பளத்தில் 8 வீதத்தை குறைக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அனைத்து அரச ஊழியர்களும் அணிதிரள வேண்டும் என தொழிலாளர் போராட்ட மையத்தின் ஏற்பாட்டுச் செயலாளர் துமிந்த நாகமுவ நேற்று (28) தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் மௌனம் காத்தால் எதிர்காலத்தில் ஓய்வூதியத்தை முற்றாக இழக்கும் நிலைமை உருவாகும் என நாகமுவ தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களின் ஓய்வூதியம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நாகமுவ தெரிவித்தார்.
பங்களிப்பு ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தும் அமைச்சரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
IMF கடன் முன்மொழிவுகளின்படி, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும், ஓய்வூதியம் ரத்து செய்யப்படும், பங்களிப்பு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்படும், வங்கி வட்டி அதிகரிக்கும், 100,000 க்கு மேல் உள்ளவர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்கப்படும், தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படும்.
இதற்கு எதிராக தனி முனைகளை உருவாக்குவதற்கு பதிலாக ஐ.எம்.எஃப் முழு முன்மொழிவுக்கும் எதிரான வேலைத்திட்டம் தேவை.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் மூன்று பில்லியன் டாலர்களுக்காக ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் பலியிடும் வேலைத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.
மாறாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகளில் தவறாக விலைப்பட்டியல் செய்து நிறுவனங்கள் கொள்ளையடித்த ஐம்பத்து மூன்று பில்லியன் டாலர் சொத்துக்களை மீட்க அரசாங்கம் ஒரு திட்டத்தை அமைக்க வேண்டும்.
மேலும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் குவித்துள்ள செல்வம் அந்த வகையில் பெறப்பட வேண்டும்.
அப்படி இல்லாத எந்த சீர்திருத்தமும் இந்நாட்டு நடுத்தர மக்களுக்கு நிம்மதியைத் தராது என்றார்.



