இன்று கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலைக்கு வரவுள்ள ஆசிரியர்கள்

வாக்கெடுப்பு ஒத்திவைப்பு, போராட்டங்களை ஒடுக்குதல்,ஆசிரியர் - அதிபர் பிரச்னைகளுக்கு தீர்வு காணாதது உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிராக அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களும் இன்று (01) கறுப்புப் பட்டி அணிந்து பணிக்கு சமூகமளிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச மட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து அரசை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜோசப் ஸ்டாலின்,
ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்க்காத நிலைக்கு அரசு வந்துள்ளது.
அரசாங்கம் இப்போது மக்களை ஒடுக்க ஆரம்பித்துள்ளது. இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
இலங்கையில் இரு இலட்சத்து நாற்பத்தேழாயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவார்கள். ஆனால், அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புப் பட்டி அணிந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.



