ரஷ்யாவின் உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ள நிதி நடவடிக்கை பணிக்குழு

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் பாரிஸ் நகரத்தில் செயல்படுகிறது. சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் கண்டறியப்பட்டால் அந்த நாடுகளை கருப்பு பட்டியலில் இந்த அமைப்பு வைத்து கண்காணிக்கும்.
இந்த பட்டியலில் இடம் பெறும் நாடுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் பெறுவதற்கும் மற்றும் பன்னாட்டு வணிகம் மேற்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்படும்.
இந்நிலையில், ரஷியாவின் உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக நிதி நடவடிக்கை பணிக்குழு இன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை பணிக்குழுவானது, 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளுக்கு தரநிலைகளை ஏற்படுத்துகிறது. அத்துடன், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை தடுக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது.
பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக ரஷியாவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



