மின் கட்டணத்தை அதிகரித்தமை அரசாங்கத்தின் போக்கிரித்தனம்: பாட்டலி சம்பிக்க ரணவக்க

கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 75 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் அண்மையில் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி கடந்த வருடம் பெப்ரவரியில் இருந்த மின்சாரக் கட்டணம் இவ்வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 765 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும், கடந்த வருட இலங்கை மின்சார சபையின் வரவு செலவுத் திட்டத்தின்படி அதன் மொத்தச் செலவு 471 பில்லியன் ரூபாவாகும் எனவும், அது எவ்வாறு 765 பில்லியன் ரூபாவாக இருக்கும் எனவும் பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பானது எண்ணெய் விலை சூத்திரம் மற்றும் விலையேற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலானது என்றும், திறைசேரி மற்றும் அரச வங்கிகளின் நிதி முறைகேடுகளுக்கு மின்சாரம் மற்றும் எண்ணெய் நுகர்வோர் பொறுப்பல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
கட்டணத் திருத்தத்தில் 90 யூனிட்டுக்குக் குறைவான பாவனையாளர்களுக்கு அதிக எடை வழங்கப்பட்டுள்ளமையும், சமுர்த்தி மானியமாக 66 பில்லியன் ரூபாவை விட 106 பில்லியன் ரூபாவை மின்சாரக் கட்டணமாகப் பெற்றுக் கொள்வதும் மிகவும் அநீதியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் கட்டணத்துடன் செயற்படும் முறைமை இருந்தும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை வெறுக்கத்தக்க போக்கிரித்தனம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.



