ஜனாதிபதி மாளிகையில் அழிக்கப்பட்ட தொல்பொருட்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்க முடியாது! தொல்பொருள் திணைக்களம்

ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் தெளிவான ஆவணங்கள் இல்லாததால், தொல்பொருட்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்க முடியாது என தொல்பொருள் திணைக்களம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களினால் அழிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் சொத்துக்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டது.
இந்த விசாரணை அறிக்கை தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவினால் ஜனாதிபதி செயலாளரிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையை போராட்டகாரர்கள் கையகப்படுத்திய போது கட்டிடம் மற்றும் அதன் சொத்துக்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலான சேதங்களை மீளமைப்பதன் மூலம் சரி செய்ய முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தொல்பொருள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செயற்பாட்டாளர்கள் கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்கிரமித்தனர்.
அப்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்த பழங்காலப் பொருட்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, சொத்து சேதம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அதனையடுத்து, குறித்த மாளிகையில் அழிக்கப்பட்ட தொல்பொருட்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் தொல்பொருள் திணைக்களம் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



