இலங்கையில் ஒனேஷை பலமுறை மிரட்டிய பிரேசில் மனைவி – விசாரணையில் அம்பலம்

ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அதற்கமைய, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மனைவியால் இலங்கையில் பல சந்தர்ப்பங்களில் ஒனேஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கோடீஸ்வர வர்த்தகருமான சுபசிங்கவின் கொலை, இலங்கையில் திட்டமிட்டு இந்தோனேசியாவில் நிறைவேற்றப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு காவல்துறைமா அதிபர், பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, இந்தோனேசிய சட்ட அமுலாக்க அதிகாரிகளின் தற்போதைய விசாரணைகளுக்கு மேலதிகமாக, மரணம் தொடர்பான முக்கிய விடயங்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் திரட்டியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பில் உள்ள சுபசிங்கவின் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், கைரேகை மாதிரிகளையும் பெற்று பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தடயவியல் ஆய்வுக்காக அதிகாரிகள், குறித்த வீட்டில் இருந்து பல பொருட்களையும் பெற்றுள்ளனர்.
வீட்டு பணியாளர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், ஒனேஷுக்கும் பிரேசிலைச் சேர்ந்த அவரது மனைவிக்கும் இடையே பல தகராறுகள் இருந்ததாகவும், அந்த சமயங்களில் ஒனேஷின் மனைவி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அவரது மனைவி மகளைக் கூட்டிக்கொண்டு பிரேசிலுக்குச் செல்ல பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சிகளுக்கு ஒனேஷ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒனேஷ் தனது பிரேசிலிய மனைவி ரோசா, 4 வயது மகள் மற்றும் அவரது மனைவின் உதவியாளரான பிரேசிலிய பெண் ஆகியோருடன் ஜகார்த்தாவில் விடுமுறையை கழித்து வந்தார்.
கடந்த 2 ஆம் திகதி அவரது செயலாளர் சுபசிங்கவை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால், அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த அடுக்குமாடி தொடரின் நிர்வாகத்திடம் விசாரித்ததையடுத்து, அவர்கள் குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது, ஒனேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் மரணித்ததை தொடர்ந்து, அவரது மனைவி ரோசாவும் மற்றைய பெண்ணும் மகளுடன், அவர்களின் அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை கதவில் வைத்துவிட்டு குடியிருப்பை விட்டு வெளியேறுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது..
அவர்கள் இந்தோனேஷியாவை விட்டு வெளியேறி தோஹாவுக்கும் அங்கிருந்து பின்னர் பிரேசிலின் சாவோ பாவ்லோவுக்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
ஒனேஷின் மனைவி மற்றும் அவரது உதவியாளரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் சர்வதேச காவல்துறையினரின் (இன்டர்போல்) உதவியை நாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



