சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாடு விரைவில் பெறும்: பிரதமர் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாடு விரைவில் பெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான சூழல் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
இதேவேளை, கடன் நிவாரணம் தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி வசதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நேற்று அறிவித்தது.
உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இலங்கை தொடர்ந்து ஈடுபடும் போது உள்நாட்டுச் சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அதிகாரிகள் போதிய உத்தரவாதங்களைப் பெற்று எஞ்சிய தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன், இலங்கைக்குத் தேவையான வெளிநாட்டு நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறியுள்ளது.



