துருக்கி நிலநடுக்கம்: சைபிரசில் இருந்து சென்ற பாடசாலை விளையாட்டு வீரர்கள் மாயம்

தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 பாடசாலை விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைப்ரஸில் இருந்து துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அதியமான் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்த இந்த கைப்பந்து அணியின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் குறித்து 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தை அடுத்து அதியமான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் முற்றாக இடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
துருக்கியினால் கையகப்படுத்தப்பட்டுள்ள சைப்ரஸின் ஃபமகுஸ்டா பகுதியில் உள்ள இரண்டு ஆண் மற்றும் பெண்கள் பாடசாலைகளின் பிள்ளைகளே இந்த அவலத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன இந்த குழந்தைகளை தேடுவதற்காக அவர்களின் பெற்றோர் உட்பட நிவாரணப் பணியாளர்கள் குழு தெற்கு துருக்கிக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.



