கோழி மற்றும் முட்டை உற்பத்தி தொழிலை புதிய பாதைக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி விருப்பம்

கோழி மற்றும் முட்டை உற்பத்தித் தொழிலை ஏற்றுமதித் தொழிலாக மாற்றுவது ஜனாதிபதியின் விருப்பமாக இருப்பதாக உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடகே தெரிவித்துள்ளார்.
தொழிற்துறையில் பணிபுரியும் அனைவரும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதன் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
கோழி மற்றும் முட்டை உற்பத்தித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு கால்நடை தீவன தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து பிரச்சனைகள், இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்திற்கான அந்நிய செலாவணி பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் கூட்டு உடன்படிக்கைக்கு வந்தால் தொழில்துறையில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கலாநிதி சுரேன் படகொட தெரிவித்தார்.
அந்த நிலைமையின் கீழ் முட்டை மற்றும் கோழிப் பொருட்களின் விலைகளை தீர்மானிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது கோழி மற்றும் முட்டை உற்பத்தித் துறையின் முன்னேற்றத்துக்காக கூட்டு உடன்படிக்கைக்கு வர விருப்பம் ஏற்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



