இன்றைய வேதவசனம் 28.01.2023: தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
ஒரு திராட்சத் தோட்டத்தின் சற்றுத் தொலைவிலே ஒரு சிறிய கிணறு ஒன்று இருந்தது.
அந்த கிணற்றிலிருந்து தினமும் இரண்டு பானைகளில் ஒவ்வொன்றாக தன் இரண்டு தோள்களிலும் தண்ணீர் சுமந்து வந்து, அத்திராட்சை செடிகளுக்கு ஊற்றுவது அத்தோட்டக்காரரின் வழக்கமாக இருந்தது.
ஒருநாள் அவ்வாறு வரும்போது, அவர் பக்கத்தில் ஒரு அழுகை சத்தமும், கேலி சிரிப்பு சத்தமும் கேட்டது. உற்றுக் கவனித்த அவர், அவ்விரண்டு சத்தங்களும் தான் சுமந்துக் கொண்டு வரும் பானைகளில் இருந்து வருகிறதை உணர்ந்தார்.
அழுகை சத்தம் வந்த இடது பக்கம் அவர் திரும்பிப் பார்த்த போது, அந்த பக்கத்துப் பானையில் பல ஓட்டைகள் இருப்பதையும், அவைகளின் வழியாக தண்ணீர் ஒழுகிக் கொண்டு இருப்பதையும் பார்த்தார்.
இப்போது வலது பக்கத்து கேலிச் சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டார்.
பின்பு, வேதனையோடு அழுதுக் கொண்டிருந்த ஓட்டை பானையிடம் “கவலைப்படாதே! உன்னை சுமப்பவன் நானல்லவா! நீ எனக்கு வேண்டும்!” என்று ஆறுதல் சொல்லி, அதன் கண்ணீரைத் துடைத்து விட்டார்.
நாட்கள் கடந்து மாதங்கள் பிறந்தன. அவர் ஓட்டைப் பானையிடம் “உன்னை நான் தினமும் தண்ணீரோடு சுமந்து வந்தப் பாதையையும், அதில் என்னுடன் நீ கண்ணீரோடு கடந்து வந்தப் பாதையையும் கொஞ்சம் திரும்பிப் பார்!” என்றார்.
ஆஹா! என்ன ஆச்சரியம்! கண் கண்ட தூரமெங்கும் பச்சைப்பசேலென பசும்புல்வெளி, அதில் வானவில்லில் இருந்துக் கொட்டிச் சிதறிய வண்ண நீர்த்துளிகளைப்போல பல வண்ணப் பூக்கள் பூத்திருந்தன.
அப்பூக்களின் இன்ப வாசனைக்கு வசப்பட்டு, தங்கள் மெல்லிய வண்ணச் சிறகுகள், இளந்தென்றல் காற்றின் மெல்லிசைக்கு இசைந்தாற்போல் அசைந்தது. அழகாக நடனமாடும் பல வண்ணத்துப் பூச்சிகள் பறந்துக் கொண்டிருந்ததையும் பார்த்த ஓட்டைப் பானையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டோடியது.
புரண்டோடும் கண்ணீருடன், “ஐயா! இனி நீரே எனது தஞ்சம்! ”என்று தன் முழு நெஞ்சத்தையும் அவரது கையில் கொடுத்து விட்டு தன் மீதி பயணத்தையும் அவரது தோளில் அமர்ந்தவாறே தொடர்ந்தது அந்த ஓட்டைப் பானை.
கேலி செய்த வலது பக்கத்துப் பானையின் நிலையைக் கேட்கவா வேண்டும்! அந்தோ பரிதாபம்! தான் வந்த பாதையெங்கும் வெறும் வெட்டாந்தரையாய் இருப்பதைப் பார்த்து, வெட்கத்தால் தலைகுனிந்து நின்றது.
பிறரால் அற்பமாய் எண்ணப்பட்டு, நான் ஒன்றுக்குமே பிரயோஜனமில்லாதவன் என்ற வேதனை உணர்வோடு உட்கார்ந்துக் கொண்டிருக்கும் அன்பு இளம் நெஞ்சங்களே! இன்று நீ பல குறைகளை உடையவனாக இருந்தாலும், “நீ தான் எனக்கு வேண்டும்” என்று சொல்லும் இயேசு கிறிஸ்துவின் கரங்களில் உன்னை ஒரு முழுமையான புத்தாண்டு பரிசாக அவருக்கு கொடுத்திடுவாயா?
அவர் தரும் ஜீவத் தண்ணீரை சுமந்துச் செல்லும் ஒரு ஓட்டைப் பானையாக நீ இருந்தால், உன்னைக் கொண்டு பல ஆத்துமாக்களை இரட்சிப்பார், உன் உள்ளத்தை ஆனந்தத்தால் நிரம்பிடச் செய்வார்! ஆமென்!! அல்லேலூயா!!!
கொரிந்தியர் 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.