அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட தகவல்!

நான் இப்போது எந்த கட்டுக்கோப்பும் இல்லாது சுதந்திர மனிதனாக இருக்கிறேன் என அரசியல்வாதியும் மூத்த திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,
“அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து பல கச்சேரிகள் நடத்தி அதில் சம்பாதித்த பணத்தில், நம் நாட்டு ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிக்க மடிக்கணணிகளை வாங்கியுள்ளேன்.
கூடுதலாக, அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர்கள் குழுவும் எனக்கு மற்றொரு தொகுதி மடிக்கணினிகளை வழங்க ஒப்புக்கொண்டது. மேலும், அவர்கள் இந்நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்கு ஏராளமான ஆடைகளையும் வழங்கினர். இந்தப் பொருட்கள் அனைத்தும் பல கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நான் சுதந்திர மனிதனாக இருக்கிறேன். இந்த நன்கொடைகளை வறிய சிறுவர்களுக்கு பகிர்ந்தளித்து எதிர்காலத்தில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என நம்புகிறோம்" என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து ஓமன் சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-206 மூலம் ஓமானின் மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை 04.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.



