ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் 12ம் திகதி சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வு தொடங்கியது.
இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தயாரித்துள்ளன.
குறித்த தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளது.
இதேவேளை, குறித்த பிரேரணைக்கு இலங்கை தனது ஆட்சேபனையை முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இருந்து சூம் தொழில்நுட்பத்தினூடாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



