அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற வேளை இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற வேளை இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் 29 வயதான ரஷிக வினோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு, கம்பஹா மாவட்டம் பஹலகமவில் இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவரின் மனைவியும், மனைவியின் நண்பியும் செவ்வாய்க்கிழமை (20) இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகில் வைத்து உந்துருளியில் வந்த இருவர் மனைவியுடைய கைப்பையை பறிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த நபரான ரஷிக வினோத் தனது தந்தையுடன் மனைவி வீடு திரும்புவதற்காக வீட்டு வாசலில் காத்திருந்துள்ளார்.
மனைவியின் கைப்பையை பறித்த அடுத்து வினாடியில், ரஷிக வினோத்தும் தந்தையும் உந்துருளியில் வந்த திருடர்களை தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் உந்துருளி ஓட்டுநர் வினோத்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ரஷிக வினோத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குற்றவாளிகள் கைப்பைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் புதன்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.



