மருந்துகளை வாங்குவதற்கு நூறு மில்லியன் டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு நூறு மில்லியன் டொலர் நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் டி.ஆர்.கே ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் புதிய முறைமையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



