தேசிய மின்கட்டமைப்புக்கு செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கும் - ரணில் விக்கிரமசிங்க

மின்சார திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தேசிய மின்கட்டமைப்புக்கு செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு குறைந்த செலவில் எரிசக்தியை உறுதி செய்வதில் இந்த மசோதா ஒரு முக்கியமான படியாகும் என்று பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட சட்டமூலமானது சில தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உதவும்.
எதிர்காலத்தில் இலங்கை குறைந்த செலவில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க இந்த சட்டமூலம் அத்தியாவசியமானது என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது நாட்டில் அதிக ஊழலை ஏற்படுத்தும் விதிமுறைகளை மீறும் முயற்சி என்று எதிர்க்கட்சி கூறியது.
இந்த திருத்தமானது 2013ம் ஆண்டு முதல் இருந்த சட்டத் தடையை நீக்கியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்த திருத்தத்தை ஒரு சில தொழிற்சங்கங்கள் தவிர ஏனைய அனைத்து பங்குதாரர்களும் வரவேற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.



