சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

15 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இன்று (09) காலை அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் அந்நாட்டிற்குள் பிரவேசிக்க முயன்ற 15 இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 19 நாட்களுக்கு முன்னர், அவர்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களின் மீன்பிடிக் கப்பல் அவுஸ்திரேலிய கடற்கரையை நெருங்கியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இந்தக் குழுவை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொறுட்பேற்கப்பட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விமானத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.



