இலங்கையில் ஸ்தம்பிதமடைந்த கட்டுமாணத்துறை: ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பு

நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான சீமெந்து, மணல் மற்றும் இரும்புத்தாது ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இலங்கையில் 99 வீதமான நிர்மாணத்துறை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக ஒரு மலசலகூடத்தை கூட அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் கூட வாறுகால் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமெந்து மூட்டையின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், மானமாப்பிட்டியில் இருந்து கொழும்புக்கு 3 கியூப் மணல் 1000 ரூபாவிற்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய அனைத்து மூலப்பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த பொறுப்பானவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.



