அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை!

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் கோரிய வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளியென கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரத்ன, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்தார்.
மேலும் வர்த்தகருக்கு மிரட்டல் விடுத்த வழங்கில் 25 மில்லியன் ரூபா அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அங்கிருந்த காணி ஒன்றில் அத்துமீறி குடியிருந்த ஒரு குழுவை வெளியேற்றுவதற்காக வர்த்தகரொருவரிடம் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த காலப்பகுதியில் மேல்மாகாண முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க, ஜெராட் மெண்டிஸ் என்ற வர்த்தகரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா கப்பம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் பாரிக் ஆகியோருக்கு எதிராக அப்போதைய சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பம் பெற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளியாக காணப்பட்டார்.
இந்த வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதியின் சாட்சியங்கள் முன்னதாகவே நிறைவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.



