கஷ்டமான நேரத்தில் சிறிலங்காவிற்கு உதவிக்கரம் நீட்டத்தயாரான ரஷ்யாவுடன் முறுகல்

ரஷ்ய எரொஃப்ளொட் பயணிகள் விமானம், கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு நாட்டில் செய்துகொள்ளப்பட்ட காப்புறுதியின் அடிப்படையில், ரஷ்ய விமானம் தடுக்கப்பட்டமையின் பின்னணியில், சதித்திட்டம் இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய சந்தேகத்தை முன்னாள் அமைச்சர்களான டியு குணசேகர, சரத் வீரசேகர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரே வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் ரஷ்யா பல ஆண்டுகளாக சிறந்த உறவைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.
அதேநேரம் இக்கட்டான சூழ்நிலையிலும் மசகு எண்ணெய்யை குறைந்த விலையில் தருவதற்கு அந்த நாடு உடன்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் அந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ள முறுகல், துரதிஸ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் விசாரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



