தாக்குதல் நடத்தப் போவதாக எனக்குத் தெரியாது! தாக்கியதாக மாலையில் கேள்விப்பட்டேன்: மகிந்த

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொண்ட வாக்குமூலம் கடந்த 26ஆம் திகதி சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்று மூன்று மணிநேர வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டது.
கொழும்பில் உள்ள பாதுகாப்பான இடமொன்றில் முன்னாள் பிரதமர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று கடந்த 24ஆம் திகதி இந்த அறிக்கையைப் பெற்றுள்ளனர்.
முன்னாள் பிரதமர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால்இ வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளனர்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் தாம் தீர்மானம் எடுக்கவிருப்பதாகவும், கடந்த 9ஆம் திகதி கட்சியினர் தம்மைச் சந்திக்க வந்திருந்த நிலையிலேயே அவர்களுடன் உரையாற்றியதாகவும் மஹிந்த இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தம்மை சந்திக்க வந்த கட்சியினர் பின்னர் போராட்டக்களத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக தனக்குத் தெரியாது எனவும், மாலையில் பல மணித்தியாலங்களின் பின்னரே இவ்வாறான தொடர் சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அன்று பிற்பகல் காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்து தாம் அறிந்த போது பல விடயங்கள் ஏற்கனவே நடந்துள்ளதாகவும், அவ்வாறு நடக்கும் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் சம்பந்தப்பட்ட கட்சியினரை அலரி மாளிகைக்குள் அனுமதித்திருக்க மாட்டார்கள் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



