பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - ஆய்வில் அதிர்ச்சி

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் 40-க்கும் அதிகமானோருக்கு மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கனடாவிலும் 12-க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலும் மே 6-ஆம் தேதியிலிருந்து இதுவரை 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் நேற்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு பாலியல் உறவால்தான் தொற்று பரவியிருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறையும், ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்பவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதை உறுதிசெய்திருக்கிறது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகளின் தரவுப்படி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும், இருபாலின சேர்க்கை பழக்கமுடையவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் இந்த வார துவக்கத்தில் தெரிவித்திருக்கிறது. WHO உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் சோஸ் ஃபால், ஆணுடன் ஆண் உடலுறவு கொள்பவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதை நாம் காணமுடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துள்ளனர். அதில் மிகச்சிலரே அரிதாக உயிரிழந்தனர். அதேசமயம் ஐரோப்பிய மற்றும் வட ஆப்ரிக்காவில் இது இன்னும் அரிதாகவே உள்ளது.
மன்ங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று முதலில் காய்ச்சல், தசை வலி மற்றும் கணுக்கால் வீக்கம் என ஆரம்பித்து பின்னரே முகம் மற்றும் உடலில் சிக்கன்பாக்ஸ் போன்று தடிப்புகளை ஏற்படுத்துகிறது.



