உக்ரைன் போரில் அதிபர் புதின் நம்பிக்கையை இழந்து விட்டார் - முன்னாள் ரஷிய பிரதமர் கருத்து

உக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் நம்பிக்கையை இழந்து விட்டதாக ரஷியாவின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2000ம் ஆண்டின் முற்பகுதியில் அதிபர் விளாடிமிர் புதினின் கீழ் பிரதமராகப் பணியாற்றியவர் மிகைல் கஸ்யனோவ். இவர் 2000 முதல் 2004 வரை புடினின் முதல் பிரதமராக கஸ்யனோவ் பதவி வகித்தார். அதன்பின், பதவி நீக்கம் செய்யப்பட்ட பின், காஸ்யனோவ் ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கி 2008 இல் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார். அவர் ஒரு எதிர்ப்பாளராக ஆனார், பின் இப்போது நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார்.
ஐரோப்பாவில் இருந்த கொண்டு மிகைல் கஸ்யனோவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“உக்ரைன் போரில் விளாடிமிர் புதினின் நம்பிக்கை அசைக்கப்பட்டுள்ளது. போரின் நிலை குறித்து ரஷிய அதிபர் அவரது தளபதிகளால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். புதினின் நெருங்கிய உள் வட்டத்தினர், அவருக்கு போரின் நிலை பற்றிய முழு தகவலையும் வழங்கவில்லை. அவர் தவறாக வழிநடத்தப்பட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
புதின் வலிமையான நிலையில் இருந்து பேசவில்லை, சமீபத்திய இராணுவ அணிவகுப்பு உரையின் போது கூட அவர் கொஞ்சம் பதட்டமாக தோன்றினார். புதினின் செயல் மற்றும் அவரது பேச்சு முற்றிலும் பலவீனமாக இருந்தது. புதின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார்.
முன்பு, எங்களிடம்(ரஷியா) பாராளுமன்றம் இருந்தது, சுதந்திரமான பாராளுமன்றம் இருந்தது. எங்களிடம் சுதந்திர ஊடகம் இருந்தது, எங்களுக்கு ஒரு நீதித்துறை இருந்தது. ஆனால், இன்று முற்றிலும் மாறுபட்ட உலகம் இது.
புதின் ஜனநாயக அரசின் அனைத்து அம்சங்களையும் அழித்தார். இப்போது ரஷியாவில் நாம் ஒரு முழுமையான சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுள்ளோம்.”



