இலங்கையில் தாக்குதல் நடத்த முன்னாள் போராளிகள் திட்டம்? நாளிதழ் செய்தியால் பரபரப்பு!

இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
புலனாய்வு தரப்பினரை மேற்கோளிட்டு இந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதிகரித்து வரும் வன்முறைகளிற்கு மத்தியில் இலங்கை அவசரகால நிலையை இரண்டு தடவை பிரகடனம் செய்துள்ள நிலையில் சர்வதேச தொடர்புகளை கொண்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் படையினருக்கும் இடையிலான மோதலில் தங்கள் பிரசன்னத்தையும் வெளிப்படுத்த முயல்கின்றனர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படும் அதேவேளை தங்களின் தலைவர் மற்றும் இசைப்பிரியா உட்பட இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக பழிவாங்குவதற்கும் இந்த தாக்குதல்களிற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தங்கள் திட்டங்களை நிறைவேற்ற சில முன்னாள் போராளிகள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர் என புலனாய்வு தகவல்கைள மேற்கோள் காட்டி சில தரப்புகள் தெரிவித்துள்ளனர்.
மாநில புலனாய்வு மற்றும் காவல்துறையை சேர்ந்த விசேட குழுவினர் ஆயிரம் கிலோமீற்றர் கடலோர பகுதியை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடல்ரோந்து மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



