ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் கொள்வனவு செய்து இலங்கைக்கு அதிக விலையில் வழங்கும் இந்தியா!

அமெரிக்க டொலர்களை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று எரிபொருள் தாங்கிகள் சர்வதேச கடற்பரப்பில் எட்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எட்டு நாள் காலப்பகுதிக்கு மேலதிகமாக கப்பல் தரையிறங்கும் திகதி வரையில் பெரும் தொகையான டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அதன் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் வசதியின் கீழ் வழங்கப்படும் கடைசி எரிபொருள் தாங்கி தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படாததால் இந்திய கடன் வசதியின் கீழ் எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள்ளும் திகதியை குறிப்பிட முடியாது எனவும் தெரிவித்தார். இரண்டாவது கடனாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியா வழங்குகின்றது.
இந்த நிலை குறித்த நெருக்கடி எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சந்தை விலையை விட குறைந்த பட்சம் 20% குறைவான விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருந்த போதிலும், இலங்கை அதிகாரிகள் அதனை மீறி செயற்படுவதாகவும், அதற்கு இந்தியா காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்து அதே எரிபொருளை இலங்கைக்கு அதிக விலைக்கு வழங்கவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



