'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது அமெரிக்கா..!

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அமெரிக்காவில் அதிகளவில் பணிபுரிகிறார்கள். எனினும் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால் அதற்காக விண்ணப்பித்து பல ஆயிரம் இந்தியர்கள் காத்துள்ளனர்.
இந்த நிலையில் கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்குரிய கிரீன் கார்டு வரம்பை அதிகரிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. குறிப்பாக குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசாக்களுக்கு ஒதுக்கப்படும் கிரீன் கார்டு வரம்பை 7-ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க இந்த மசோதா அங்கீகரிக்கிறது.
நீதித்துறைக்கான நாடாளுமன்ற குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும். இந்த மசோதாவுக்கு செனட்சபையின் ஒப்புதலும் அவசியம். செனட் சபை ஒப்புதலுக்கு பிறகு ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திடுவதற்காக இந்த மசோதா வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜனாதிபதி கையெழுத்திட்ட பின் சட்டமாக மாறும். இந்த மசோதா சட்டமாக மாறினால் அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள், சீனர்கள் அதிகளவில் பலன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.



