இலங்கையில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல் காரணமாக விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதில் சிக்கல்!

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மே மாதத்திலிருந்து முன்னர் எடுத்த ஏற்பாடுகள், விமான ஆசன முன்பதிவு (Bookings) என்பனவற்றிற்கான நிதியை மீள வழங்க அறிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"நாட்டில் தினமும் ஏற்படும் டொலர் மாற்றம் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முன்பதிவு செய்யப்படும் பணத்தினை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் முன்பதிவு என்பனவற்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இவை இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன்,வெளிநாடுகளில் உள்ளவர்களே விமான ஆசனங்களை முன்பதிவு செய்து வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல் காரணமாக விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கூட தரையிறங்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.



