தற்போது பொது தேர்தலுக்கு சாத்தியமில்லை- பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

#Pakistan #ImranKhan #Election
Prasu
4 years ago
தற்போது பொது தேர்தலுக்கு சாத்தியமில்லை- பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் என குற்றஞ்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. 

இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.  இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த 3ந்தேதி கூடியது.  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தன.

ஆனால் அது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காசின் கானால் நிராகரிக்கப்பட்டது.  இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தின.

இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும். யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும் என்று இம்ரான் கான் பேசினார்.

இந்த சூழலில், இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

எனினும், திட்டமிட்டபடி பொது தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  இதுபற்றி அந்நாட்டு அரசால் மக்களுக்காக ஒலிபரப்பப்படும் ரேடியோ பாகிஸ்தான் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கு முன் பொது தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  சுதந்திர முறையில், தெளிவான மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த தேர்தலை நடத்துவதற்கு 7 மாதங்கள் தேவைப்படும் என்றும் அறிவித்து உள்ளது என ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4