லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் பெண்ணைக் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞன் - நடந்தது என்ன - வீடியோ

லண்டனில் பட்டப்பகலில் இளம் பெண் ஒருவர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் லண்டன் – ஈஸ்ட்ஹாம் பகுதியில் உள்ள ஹைதராபாத் வாலா (Hyderabad Wala) எனப்படும் தென்னிந்திய உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவகத்திற்கு வந்த இளைஞன் ஒருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் கையை பிடித்து இழுத்து அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்த ஆரம்பித்துள்ளார்.
உணவகத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பற்ற முயற்சித்த போது அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பல முறை கத்திக்குத்துக்கு காயங்களுக்குள்ளான பெண் கீழே விழுந்துள்ளார்.
அதன் பின்னரும் விடாமல் அந்த இளைஞன் கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன் தப்பி சென்றவரை துரத்தி பிடித்து கைது செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதி ஆசிய மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இடம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல முறை கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளான பெண் 30 வயதுடைய மலையாளி என தெரியவந்துள்ளது.
மேலும் பெண்ணை கத்தியால் குத்தியவர் கேரளாவை சேர்ந்த தமிழ் இளைஞன் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



