ரஷ்யாவின் இராட்சத போர்க்கப்பலை தரைமட்டமாக்கிய உக்ரைன் - மீண்டும் வலுக்கும் ரஷ்ய உக்ரைன் முடிவில்லாப் போர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 1 மாதம் ஆகி உள்ளது. ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் என அறிவித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள் என தாக்குதல் எல்லையை ரஷியா விரிவுபடுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
கீவ், மரியுபோல், கார்கிவ் என பல நகரங்களில் கட்டிடங்கள் எலும்புகூடுகளாக காணப்படுகின்றன. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, தற்போது கிடைக்கக்கூடிய தகவல்கள் அடிப்படையில் ரஷிய படையினர் போர்க்குற்றங்களை இழைத்துள்ளனர். தனது நியாயமற்ற விருப்பப்போரை ரஷிய அதிபர் புதின் தொடங்கியதில் இருந்த இடைவிடாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். உக்ரைன் முழுவதும் மரணங்களையும், அழிவையும் இந்த போர் ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டார்.
இதுநாள் வரை நடந்த போரில் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட 64 சுகாதார கட்டமைப்புகள் தாக்கப்பட்டு, 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இதற்கிடையே ஒரு மாத கால போரில் உக்ரைனில் ரஷிய படையினர் 15 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ மதிப்பிட்டுள்ளது.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இருந்து வருகிற பெர்டியன்ஸ் நகர் அருகே ரஷியாவின் பிரமாண்டமான போர்க்கப்பலான ஓர்ஸ்க்கை, உக்ரைன் படைகள் நேற்று அழித்துள்ளன.
இதையொட்டிய படங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இந்த நகரம் மரியுபோல் நகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்டுள்ள போர்க்கப்பல் 20 டாங்குகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
இந்த கப்பல் அழிக்கப்பட்டதை உக்ரைன் துணை ராணுவ மந்திரி ஹன்னாமல்யார் உறுதிப்படுத்தினார்.
ரஷிய படைகள் பிடித்து வைத்துள்ள கெர்சன் நகரில், புகழ் பெற்ற நாடக இயக்குனர் ஒலெக்சாண்டர் டகாஷெங்கோவை 9 ராணுவ வாகனங்களுடன் வந்து ரஷிய படைகள் பிடித்துச்சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அண்டை வீட்டினர் யாரேனும் வெளியே வந்தால் கொல்லப்படுவார்கள் எனவும் ரஷிய படையினர் மிரட்டி உள்ளனர்.
உக்ரைனில், தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் குண்டுகளை ரஷிய படைகள் நேற்று காலை பயன்படுத்தியதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதே நேரத்தில் அவர் இது குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
கார்கிவ் அருகேயுள்ள இசூம் நகரை கைப்பற்றி உள்ளதாக ரஷியா கூறுகிறது. ஆனால் அங்கு சண்டை தொடர்வதாக உக்ரைன் சொல்கிறது.
பூமியின் நரகமாக மாறியுள்ள மரியுபோல் நகரில் ரஷிய தாக்குதல் தொடர்கிறது. தண்ணீர் இல்லை என்னும் நிலையில் அங்கு பனிக்கட்டிகளை கரைய வைத்து பருகுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நகரை இழக்க விரும்பாமல் ரஷியாவுடன் தொடர்ந்து உக்ரைன் படைகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.



